3
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வரும் நிலையில் இன்று 1,974 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு, சோதனை மற்றும் இறப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 14) மாலை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்த 42 பேர் உட்படத் தமிழகம் முழுவதும்1974 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 7.10 லட்சம் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 44,661 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை 1,415 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 31,896ஆக அதிகரித்துள்ளது. 29 மாவட்டங்களில் இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரே நாளில் 1,138 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக வீடு திரும்பியோரின் எண்ணிக்கை, 24,547ஆக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரையிலான பலி எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது. ஜூன் 10- 19 பேர்,ஜூன் 11- 23 பேர், ஜூன் 12 – 18 பேர், ஜூன் 13 – 30 பேர், என கடந்த 5 நாட்களில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 138ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
**-கவிபிரியா**�,