அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐசிஏஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி ஒருவர் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அரிநாயகம், சுமதி என்ற தம்பதியின் மகள் ஓவியா. இவர் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில், பிவிஎஸ்சி(கால்நடை மருத்துவர்) படித்து முடித்துள்ளார்.
வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மத்திய பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் முதுகலைபாடப் பிரிவில் சேருவதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை இந்தியா வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஐசிஏஆர் தேர்வை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓவியாவும் எழுதினார். இதனின் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இதில் 480 மதிப்பெண்களுக்கு 329 மதிப்பெண் பெற்று, ஐசிஏஆர் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் கால்நடை மருத்துவ மேற்படிப்புக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை ஓவியா பெற்றுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று(நவம்பர் 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில், தமிழ்நாட்டின் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஓவியா தமிழ்நாட்டில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் வழிகல்வி பயின்ற தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
**-வினிதா**
�,