புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, அதுகுறித்து விளக்கமளித்துள்ளார் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங்.
புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இங்கு, 30 தொகுதிகள் உள்ளன. 10 லட்சத்து 2 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங் கூறுகையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். உடனடியாக அனைத்து அரசியல் விளம்பரங்களையும் அகற்ற வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி-தமிழக எல்லைப் பகுதியில் 36 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் கீழும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 9,140 அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 952லிருந்து 1,559 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 233 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 16 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மதுபான கடைகள், ‘கள்’ மற்றும் சாராய கடைகளை இரவு 10 மணிக்குள் மூட வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைதான் மதுபானங்களை அனுமதியுடன் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
**-வினிதா**�,