தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு நேற்று (மார்ச் 11) இரவு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர் )தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என நேற்று சட்டமன்றத்தில் திமுக கோரிக்கை வைத்த நிலையில் அதை வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் நிராகரித்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு, 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு தனது அரசிதழில் மறு அறிவிக்கை செய்துள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதற்கட்டப் பணியில் வீடுகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக அரசின் அரசிதழில், நடைபெற உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக முதற்கட்டமாக வீடுகளைக் கணக்கிடும் பணிக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வீடுகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் 31 வகையான கேள்விகள் இடம் பெற்றுள்ளன. வாடகை வீடா, சொந்த வீடா என்பதில் தொடங்கி குடிநீர் எவ்வாறு பெறப்படுகிறது, கழிவறை வசதி உள்ளதா, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி உள்ளதா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
**-வேந்தன்**�,