ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இன்று (அக்டோபர் 25) காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசு மருத்துவர்களுக்குக் காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறை படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதமும் போராட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஆகஸ்ட் 28ஆம் தேதி மருத்துவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், ஆறு வாரங்களுக்குள், ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றித் தரும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் ஆறு வாரங்கள் கடந்தும் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் இன்று முதல் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம், சென்னை என தமிழகம் முழுவதும் 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிர்காக்கும் அவசர கால சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவு தவிர மற்ற அனைத்து சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, சென்னை சென்ட்ரலில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறியதாவது, “2015 முதலே 6ஆவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியுள்ளோம். கடந்த ஓராண்டாக கருப்பு பேட்ஜ் அணிவது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது, தர்ணா என பல வகையில் எங்களது கோரிக்கையை அரசிடம் தெரியப்படுத்தி வந்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது சுகாதாரத் துறை அமைச்சர் எங்களை அழைத்து பேசினார். அந்த சமயத்தில் அமைச்சர் வெளிநாடு செல்வதாக இருந்தது. அந்த பயணத்தின் தீவிரத்தை உணர்ந்து, 6 வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற அமைச்சரின் எழுத்துப்பூர்வ உறுதியை நம்பி போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் ஆறு வாரங்கள் ஆகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். உயிர் காக்கும் அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்கும் என்றும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களிடம் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.�,