மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக விளை நிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாகப் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ “கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களால் ஏற்பட்ட கனமழை காரணமாக வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் 3.10 லட்சம் ஹெக்டேர் அளவில் பாதிக்கப்பட்டன.
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, கடந்த ஜனவரி 2 அன்று மாநிலப் பேரிடர் நிவாரண விதிமுறையின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கும் அதிகமான தொகையை அரசு நிர்ணயித்து, ரூபாய் 565.46 கோடியை அறிவித்தது.
இந்நிவாரணத்தில், இதுவரை 487 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பு ஜனவரி மாதத்தில் இதுவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவான 10.2 மில்லி மீட்டருக்கு இதுவரை மிக அதிகமாக 108.7 மில்லி மீட்டர் வரை பெய்துள்ளது.
இதனால், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை அதிகமாக உள்ள காரணத்தால், வருவாய்த் துறை , செய்தி மற்றும் விளம்பரத்துறை , ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் சேர்ந்த அமைச்சர்களை, இம்மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்திடக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அறுவடை நிலையிலிருந்த நெற்பயிர்களும், இதர பயிர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட வயல்களில் போர்க்கால அடிப்படையில், கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்வதற்கு வேளாண் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,