தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2018 – 2019 ஆண்டில் உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பில் முன்னாள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே,. மகேந்திரன், மற்றும் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (25.09.2019) தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைமை அலுவலகம் சென்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இது தொடர்பாக எழுதிய கடிதத்தை அளித்துள்ளனர்.
அக்கடிதத்தில், “ கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி, தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதை எதிர்கொள்ள புதிய மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம், மீட்டர் காப்பீட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம் ஆகிய கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இது வியப்பாக உள்ளது.
ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்த அறிவிப்பால் மின்சார இணைப்புக்கான பதிவு கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்கிறது. ஒரு முனை இணைப்புக்கான வைப்புத்தொகை 200 ரூபாயில் இருந்து, ஆயிரம் ரூபாயாக உயர்கிறது. மும்முனை இணைப்புக்கான வைப்புத் தொகை ரூ. 600-ல் இருந்து ரூ. 1,800 ஆக உயர்கிறது.
மின் இணைப்பு வழங்குவதற்கு இடத்தை ஆய்வு செய்ய, இதுவரை கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் உத்தேசித்துள்ள கட்டணப்படி ஒருமுனை இணைப்பு கொடுக்க ஆய்வு செய்ய 580 ரூபாய் என்றும், மும்முனை இணைப்பு கொடுக்க 1,520 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மின் கட்டணம் செலுத்த முடியாமல் போனால் அபராத தொகை 60 ரூபாய் என்று இருந்த நிலை மாறி, ஒரு முனை இணைப்புக்கு அபராதம் 650 ரூபாய், மும்முனை இணைப்புக்கு அபராதம் 750 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக் காட்டியுள்ள கே. பாலகிருஷ்ணன்,
“இதுபோன்ற கட்டண உயர்வுகளால் வருடத்துக்கு 1500 கோடி ரூபாய் உயர வாய்ப்பிருக்கிறது. இதே உத்தியைதான் 2010ம் ஆண்டும் கடைபிடித்து பல ஆயிரம் கோடி ரூபாயை உயர்த்தியது. மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படுகின்ற நிதி இழப்பீடுகளை மாநில அரசே எதிர்கொள்ள வேண்டும் என்ற உதய் திட்டத்தில் கையெழுத்திட்ட தமிழக அரசு, கட்டண உயர்வு முறையை கையாள்வது ஏற்கத் தக்கதல்ல.
தமிழக மின்சார வாரியத்தில் சுமார் 2 கோடியே 97 லட்சம் மின்நுகர்வோர்கள் உள்ளனர். இவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியாவசியமானது மின்சாரம். தொழில், விவசாயம், குடும்பத்தின் அத்தியாவசிய சேவை ஆகியவற்றிற்கு அடிப்படையாக மின்சாரம் விளங்குகிறது.
உத்தேசித்துள்ள மின் இணைப்பு கட்டண உயர்வுகளை பார்க்கின்றபோது தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து 5 மடங்கு முதல் 8 மடங்கு வரை கட்டண உயர்வுக்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாயை மக்கள் மீது மின் இணைப்பு கட்டணச் சுமையாக சுமத்த உள்ளது. இதனால், ஏற்கனவே பொருளாதார மந்தம், தொழில் நசிவு, விவசாய பாதிப்பு போன்றவைகளினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு மேலும் பொருளாதார சுமை அதிகரிக்கும். அபரிமிதமான கட்டணத்தை சுமக்க உள்ளவர்களுக்கு மட்டுமே மின்சாரம் என்ற நிலை உருவாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.�,”