{தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: கைதும் கண்டனமும்!

public

1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இதில் தமிழ் மொழி பேசுவோர் இருப்பவர்கள்  மெட்ராஸ் மாநிலம் என அழைக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் 14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டன. தெலுங்கு, கன்னடம், மலையாளிகள் பிரிந்து போன பின்பும் கூட தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க முடியாத நிலை இருந்து வந்தது.

பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு,  தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயர் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கே, 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.  இதையடுத்து தமிழ் மக்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இயங்கத் தொடங்கிய 1956 நவம்பர் 1ஆம் தேதி  நம் மாநிலம் உருவான நாள் என்பதால், அந்த நாளை கொண்டாட வேண்டுமென்பது பல தமிழறிஞர்கள், ஆய்வாளர்களின் நீண்டகால கோரிக்கையாகவே இருந்துவந்தது.

கேரளாவில் இந்த தினம், கேரள பிறவி தினம் என்றும் கர்நாடகத்தில் இந்த நாள் கன்னட ராஜ்யோத்ஸவம் என்றும் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால் தமிழகத்தில் இது ஒரு விழாவாகக் கொண்டாட முன்னெடுக்கப்படாமலேயே இருந்தது.

இந்த சூழலில், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி சட்டமன்றத்தில் விதி எண் 110கீழ் அறிவித்தார்.  இதனையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு ”தமிழ்நாடு தினம்”  கொண்டாடப்பட்டது. இதற்காகத் தமிழக அரசு 10 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்தது.

**முதல்வர் வாழ்த்து**

இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் எனும் உன்னத செல்வத்தை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் பேசும் நம் மாநிலத்தை இந்திய அரங்கில் உயர்த்துவதிலும் தொடர்ந்து பாடுபடுவோம் என்கின்ற உறுதி மொழியோடு அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தார்.

**வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தலைமைச் செயலகம்**

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மின் விளக்குகளால் தலைமைச் செயலகமான கோட்டை ஜொலிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

**தனிக்கொடி ஏற்றியவர்கள் கைது**

தமிழ்நாடு தினம் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினரால் கொண்டாடப்படும் நிலையில், தனிக்கொடி ஏற்றினால், ஐபிசி 124படி  தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட காவல்துறையினர் எச்சரித்திருந்தனர்.   சென்னை மேடவாக்கத்தில் உள்ள பாவலரேறு தமிழ்க்களத்தில் தமிழ்நாடு நாள் விழாவிற்கான ஏற்பாடுகளையொட்டி பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதில், தமிழ்நாட்டின் வரைபடத்தை மட்டும் கொண்ட கொடிகளும் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கொடிகளை வைத்து பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மண்டேலா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழக அரசு தனிக்கொடி வெளியிட்டு அதற்கு மாறாக பொழிலன் வேறு கொடியை ஏற்றியிருந்தால் இதனைக் குற்றமெனக் கருதலாம். அவ்வாறின்றி, அவரைக் கைதுசெய்யும் அரசின் இந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

**திராவிடர் விடுதலை கழகம் கண்டனம்**

 “தமிழ்நாட்டுக் கொடி என இக்கொடியை ஏற்றுவது தமிழர்களுக்குத் தன்னுரிமை உணர்வையும், இனப் பற்றையும், ஓர்மையையும் கொடுத்துவிடும் என்று இந்த அரசுகள் அச்சப்படுகின்றன.

அதனால் தான் நேற்று  மாலை வரை அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை தனித் தனியாக இரவோடு இரவாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளவர்களின் வீடுகளுக்குச்  சென்று ஒவ்வொருவரின் பெயரிலேயே தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. அதில் அவர்கள் தேசத்துரோகச் சட்டம் ஆன 124 ஏ பாய்ச்சப்படும் என அச்சுறுத்தியும் இருக்கிறார்கள்.

ஒரு கொடி ஏற்றுவதற்கே இவ்வளவு தடைகளை இரவு முழுவதும் காவல்துறை பணிசெய்து உத்தரவை வழங்குகிறது என்றால் இந்த அரசு யாருக்கான அரசு ? மாநில முதலமைச்சர், தமிழ்நாடு நாளைக் கொண்டாடுவதற்கு நேற்று வாழ்த்து தெரிவித்த நிலையில் இரவு, நள்ளிரவு இப்படி காவல்துறை உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது என்றால் தமிழகக் காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்கிற சந்தேகம்  எழுகிறது.

ஆந்திரா,கர்நாடகா,காஷ்மீர் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கொடிகளை மாநில அரசுகளே அங்கீகரித்து மக்கள் மன்றத்தில் பரவலாகக் கட்சி பாகுபாடின்றி ஏற்றி விழாக்களை முன்னெடுக்கிறார்கள்.  தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? இந்திய ஒன்றியம் தமிழர்களை அந்நியர்களாய் பார்க்கிறதா ?  தமிழக அரசும் காவல்துறையும் பிற மாநிலங்களை பார்த்தாவது இதுபோன்ற ஒடுக்குமுறைகளைக் கைவிட்டு மக்களின் உணர்வை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

கருத்து முரண் கொண்டு  பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள தமிழ் நாட்டுக் கொடியை ஏற்காமல் வெளியில் நிற்கும் தமிழர்களின் உரிமை பேசும் அமைப்புகள் இக்கொடியை அங்கீகரித்து இந்த ஒரு நிகழ்வில் மட்டுமாவது எங்களோடு கரம் கோர்த்து தமிழ்நாட்டின் தன்னுரிமைக்கு வலு சேர்க்க வேண்டும்.

தமிழர் அமைப்புகள் இன்னும் விரிவாகக் கூடி உருவாக்கும் வேறு ஒரு பொதுக் கொடியையோ, அல்லது அரசு அனைத்து கட்சிகளையும் கலந்து அறிவிக்கும் ஒரு பொதுக் கொடியையோ ஏற்கவும் அணியமாய் இருப்போம்.

நமக்குத் தேவை எல்லா தமிழர்களையும் இணைக்கும் ஒரு பொதுக் கொடிதான்! தமிழர்களின் இழந்துவிட்ட உரிமைகளை மீட்க, இருக்கும் உரிமைகளைக் காக்க, பெறவேண்டிய உரிமைகளைப் பெறக் கட்சி, அமைப்பு, சமயம், ஜாதி எல்லைகளைத் தாண்டி ஒன்றிணைய வேண்டிய கட்டாயம், எப்போதையும் விட இப்போது அதிகம் உள்ளது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்” என்று திராவிடர் விடுதலை கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**மதுரை தமுக்கம்**

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து, நீட் தேர்வு ரத்து, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளைப் பரிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

**காமராஜர் காலத்திலேயே…. சீமான்**

இன்று காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம், ராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  தலைமையில் தமிழ்நாடு நாள் பெருவிழா நடைபெற்றது. தமிழ் எல்லை மீட்பு போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு  ‘தமிழ்நாட்டுக்கொடி’ ஏற்றப்பட்டது.  இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடக சட்டமன்றத்திலேயே அம்மாநிலத்தின் கொடி பறக்கிறது. ஆனால் தமிழகத்தில் இல்லை. இன்று ஏற்றப்பட்டது நாம் தமிழர் கட்சியினர் உருவாக்கவில்லை. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், ம.போ.சிவஞானம் போன்றவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி அதில் சிறு மாற்றம் செய்தது. இது போட்டிக்காக  உருவாக்கக் கூடிய வேலையில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே இந்த கொடி ரிப்பன் கட்டிடத்தில் ஏற்றப்பட்டுப் பறக்கவிடப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *