தமிழகத்தில் ஏழு நாட்களுக்குப் பின்னர் இன்று (ஜூலை 30) கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.
மாலத்தீவு, சிங்கப்பூர், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேஷ், ஆந்திர பிரதேஷ், டெல்லி, பிகார், குஜராத், ஜம்மு காஷ்மீர், கேரளா, பஞ்சாப், புதுச்சேரி, தெலங்கானா என பிற மாநிலங்களிலும், நாடுகளிலும் இருந்து வந்த 53 பேர் உட்பட தமிழகம் முழுவதும் இன்று 5,864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி மொத்த மதிப்பு 2,39, 978 ஆக அதிகரித்துள்ளது. இன்று 59 ,473 பேர் உட்பட இதுவரை 25,01,919 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்களும் 119 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் 5,295 பேர் உட்பட இதுவரை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 178 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக இன்று தனியார் மருத்துவமனைகளில் 32 பேர் அரசு மருத்துவமனைகளில் 65 பேர் என 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,175 பேர் உட்பட இதுவரை 98,767 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாகச் செங்கல்பட்டில் 354 பேருக்கும், திருவள்ளூரில் 325 பேருக்கும் , கோவையில் 303 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,