தமிழகம்: தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் சொல்வது என்ன?

Published On:

| By Balaji

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் தற்போது, அதனை செலுத்திக் கொள்ள பெரும்பாலானோர் முன் வருவதில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கடந்த இரு நாட்களாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 16,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2,500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது. ஈரோட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரும் முன் வராததால், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையம் மூடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து நாம் விசாரித்ததில், “தற்போது, மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் துப்புரவு பணியாளர்களைக் கட்டாயமாக அழைத்து வந்து தடுப்பூசி போடுகின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒரு சிலருக்கு லேசாக மயக்கம் ஏற்படுவதால், மருத்துவ துறையில் இருக்கிற இணை இயக்குநர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் ஊசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இது தவிர, தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக் கூடாது என்பதால் மது பழக்கம் இருக்கக் கூடியவர்கள் தயக்கம் காட்டுவதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே சமயத்தில் சில முன்களப் பணியாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். அரசு செவிலியர் பள்ளி போதகர் கண்ணன் நம்மிடம் கூறுகையில், “ ஊசி போட்டுக் கொண்டு 30 நிமிடங்கள் மருத்துவர்கள் கண்காணித்தனர். சாதாரண ஊசி போட்டுக்கொள்வது போலதான் இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு ஏற்படும் வலி போல், தற்போது ஊசி போட்டுக்கொண்ட இடத்தில் வலி உள்ளது. மற்றபடி, இதில் எந்த பயமும் இல்லை” என்றார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share