கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மட்டும் இன்னும் குறையவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000 ஐத் தாண்டியுள்ள நிலையில், சென்னையில்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனினும், அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத் துறை இன்று (மே 18) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 46 பேர் மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் வந்தவர்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 7,270 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 236 பேர் வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 364 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில்தான் அதிகமாக 7114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 78 லிருந்து 81 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 10,887 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 3,22,508 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 7647 பேர், பெண்கள் 4,110 பேர், திருநங்கையர்கள் 3 பேர். கொரோனா சோதனையைப் பொறுத்தவரை 39 அரசு, 22 தனியார் என 61 ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
**எழில்**
�,