இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கிறிஸ்துமஸை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கோகோ கடற்கரையில் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து சர்ஃபிங் செய்து கொண்டாடினர்.
அதுபோன்று தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்துமஸைக் கொண்டாடியுள்ளனர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சென்னை சாந்தோமில் உள்ள பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிறகு காலையில் பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறினர். பெசன்ட் நகர் தேவாலயத்தில் குவிந்த மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
**தோனி கேக்**
சேலத்தில் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பேக்கரி ஒன்றில் கிரிக்கெட் வீரர் தோனியின் உருவத்திலான 6 அடி உயர கேக் செய்து வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இது பார்வையாளர்களைக் கவர்ந்தது மட்டுமில்லாமல், அதனுடன் பலர் செல்ஃபி எடுத்துச் சென்றனர்.
**கடலுக்குள் கேக் வெட்டி கொண்டாட்டம்**
கிறிஸ்துமஸை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நேற்றே உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் விடுமுறை என்பதால் மக்கள் தேவாலயங்கள் மற்றும் கடற்கரைக்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குளச்சலில் மீனவர்கள் குடும்பத்தினருடன் கடலுக்குள் சென்று, கேக் வெட்டி ஆடிப்பாடிக் கொண்டாடினர்.
**மதநல்லிணக்க கிறிஸ்துமஸ்**
தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று கடலில் கரைத்துக் கொண்டாடினர். இந்து கோயில்களில் நடத்தப்படுவது போன்று கும்மிப் பாட்டு, முளைப்பாரி பவனி உள்ளிட்டவற்றுடன் வித்தியாசமாகக் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.
வேளாங்கண்ணியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண மின் விளக்குகளால் நள்ளிரவில் ஜொலித்தது. அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலியின் போது இயேசு கிறிஸ்து பிறந்தது குறித்து வாசிக்கப்பட்டது.
�,”