போக்குவரத்து ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று (மார்ச் 10) மாநிலத்தின் அனைத்து மண்டலங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 20ஆம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 2018 ஜனவரி 4 முதல் 11 ஆம் தேதி வரை போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து கழக தொமுச பொதுச் செயலாளர் சிவன் பிள்ளை தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. இந்த ஆலோசனைக்குப் பின்னர், “14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பான எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை. போக்குவரத்து ஊழியர்களை அரசு வஞ்சிக்கிறது. எனவே பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்” என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் வரும் மார்ச் 20ஆம் தேதி 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை காலை 10 மணிக்குக் குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தக் காலம் முடிந்து 6 மாதங்களாகி விட்டது. புதிய ஊதிய கோரிக்கைகள் போக்குவரத்து நிர்வாகங்களுக்கும், அரசுக்கும் அனுப்பியும் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. கடந்த ஊதிய ஒப்பந்தமும் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே ஏற்பட்டது என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
பொதுமக்களின் பயண சேவையை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராமல் கண்ணஞ்சாமல் விபத்துகளின்றி பணிபுரிந்து வரும் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது.
இப்பிரச்சினையில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டுப் போராடும் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கும், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
**கவிபிரியா**
�,