லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.5.58 லட்சம் பறிமுதல்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.5.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றிருக்கிறது. கோவையில், துடியலூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.

மூன்று இடங்களிலும் இன்று (அக்டோபர் 5) மாலை வரை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.5.58 லட்சம் உட்பட சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை துடியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.2 லட்சம், சென்னை கே.கே. நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.40,710 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர், ஒட்டேரி, திண்டுக்கல் வேடசந்தூர், கரூர், விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் ஆகிய 5 இடங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.7.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி சிலா் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் வந்ததை அடுத்து அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share