தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தேர்வு தாமதமாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு வருவதால் ஒருவித பதட்டத்திற்கு மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் இணைந்து புதிய திட்டம் ஒன்றை துவங்கி இருக்கிறார்கள். ”டேக் இட் ஈசி” என்ற இந்த திட்டத்தை ஏற்படுத்தி இருப்பதன் மூலம் மாணவர்களின் பதட்டம் குறைவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக மாணவர்கள் பயன் பெற 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். பிறகு தானியங்கி அழைப்பு ஒன்று அந்த மொபைலுக்கு வரும். அதில் ”டேக் இட் ஈசி” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வசதி இருக்கும் என்பது உறுதியில்லை என்பதால் போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினம் ஒன்றாக 30 நாட்களுக்கான கதைகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு அழைக்கும் மாணவர்கள் அந்த நாளுக்கான கதையை கேட்க முடியும். இந்த கதைகள் குழந்தைகளால் கூறப்படுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கான கதைகளாகும்.
இந்த கதைகள் மாணவர்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் பதட்டம் மற்றும் தங்களது பெற்றோர்களால் கொடுக்கப்படும் அழுத்தம், ஒரே இடத்தில் அடைந்து இருப்பதால் ஏற்படும் பதட்டம் ஆகியவற்றை பற்றி இருக்கும். கடந்த வாரம் மட்டும் டேக் இட் ஈசி திட்டத்திற்கு 22647 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தீபா இந்த திட்டத்திற்கு மூன்று முறை இதுவரை அழைத்து கதைகளை கேட்டுள்ளார். கதைகள் உபயோகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவற்றில் ஒரு கதையில் ஒரு முறையான திட்டத்தை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து கூறப்பட்டதாகவும் தற்போது கடைசி கட்ட தயாரிப்பில் அது எவ்வளவு பயன் அளிக்கும் என்று தான் புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ள மாணவி, மேலும் தினமும் சில வரிகளை எழுதி வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
** – பவித்ரா குமரேசன்**�,