நேற்றிரவு விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த பெருமழையினால் அங்குள்ள கண்மாய் கரை உடைந்து, அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது.
கடந்த சிலநாட்களாக, விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று (அக்டோபர் 20) இரவு அம்மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெருமழை பெய்தது. இதன் காரணமாக, அங்கு சராசரி மழையளவு 29.45 செ.மீ. என்ற அளவில் பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தினால், இவ்வட்டாரத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. அருகிலுள்ள கண்மாய்களில் நீர் நிரம்பின. நேற்றிரவு விருதுநகர் அருகிலுள்ள சத்திரெட்டியாபட்டி கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், விருதுநகர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனைக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் 80 பேருந்துகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பணிமனைக்குள் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்கில் இருந்த 12,000 லிட்டர் டீசல் வீணானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் படிக்கட்டுகள் வரை தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால், பேருந்துகளை இயக்கமுடியாமல் ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். காலை 7.30 மணியளவில் நிலைமை ஓரளவு சீரடைந்தது. விருதுநகர் சீனியாபுரம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் வெள்ளம் நிரம்பியதால், கவுசிகாமநதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அதன் கரையோரத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் வட்டாரத்திலுள்ள ஏரிகளிலும் வேகமாக நீர் நிரம்பி வருகிறது.
�,”