உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர் இடம்பெற்றுள்ளார். அணியில் நுழைந்த சிறிது காலத்திலேயே உலகக் கோப்பைக்காக விளையாடுவது மிகப் பெரிய வாய்ப்பு என பாராட்டுகள் வந்தாலும் விமர்சனங்களையும் அவர் சந்தித்துள்ளார்.
இந்திய அணியில் நான்காவதாக களமிறங்கும் வீரர் யார் என்ற கேள்வியே அணித் தேர்வுக்கு முன் பிரதானமாக இருந்தது. அந்த இடத்துக்குப் பரீசிலிக்கப்பட்டவர்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு. இந்த நிலையில் ராயுடுவுக்குப் பதில் விஜய் ஷங்கரைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேட்கப்பட்டது.
“ராயுடுவுக்குச் சில வாய்ப்புகள் அளித்தோம். ஆனால், விஜய் ஷங்கர் முப்பரிமாணங்களை வழங்குகிறார். பேட் செய்வார், வானிலை மேகமூட்டமாக இருந்தால் பௌலிங் செய்வார், அவர் ஒரு பீல்டரும் கூட. நாங்கள் விஜய் ஷங்கரை நான்காவது வீரராகப் பார்க்கிறோம்” என்று கூறினார்.
விஜய் ஷங்கருக்கு ஆதரவாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் கௌதம் கம்பீர், முரளி கார்த்திக் ஆகிய இருவரும் ராயுடுவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
இந்த நிலையில் தன்னை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்தும், அந்த இடத்தில் விஜய் ஷங்கரைச் சேர்த்தது குறித்தும், எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்த விளக்கத்துக்கு எதிராக மறைமுகமாக அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
“இப்போதுதான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன், உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் ஷங்கரை முப்பரிமாணங்களை வழங்குவார் என்று எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதன் காரணமாகவே இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.�,