ரூபாய் நோட்டுகளால் தொற்றுநோய் பரவ வாய்ப்பிருப்பதால், அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோருக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி). அதில், சிறுநீர் குழாய் நோய்த்தொற்று, மூச்சுக் குழாய் நோய்த்தொற்று, தோல் பாதிப்புகள், வயிறு பாதிப்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ரூபாய் நோட்டுகளால் பரவ வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வறிக்கைகளிலும் ஊடகச் செய்திகளிலும் வந்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.
“இந்தத் தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அரசைப் போலவே இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளும் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்தத் தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகளவிலான ரூபாய் நோட்டுகள் வர்த்தகத் துறையில் புழங்குவதால், வர்த்தகர்கள் மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிஏஐடி பொதுச் செயலாளர் பிரவீண் கந்தல்வால் கூறுகையில், ரூபாய் நோட்டுகளால் பரவும் நோய் கிருமிகள் குறித்து விஞ்ஞானிகள் ஆண்டுதோறும் எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.�,