Tராகுலுக்குப் பிரதமர் வாழ்த்து!

Published On:

| By Balaji

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 48ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் உள்படப் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 1970ஆம் ஆண்டு பிறந்தார். 2004ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் ராகுல், 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

இன்று ராகுல் காந்தியின் 48ஆவது பிறந்தநாளை டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் மேளதாளங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் பேனர், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதுவை முதல்வர் நாராயணசாமி, தனது நெல்லித்தோப்பு தொகுதியில் கோயிலில் வழிபாடு நடத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ராகுல் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “காங்கிரஸ் தலைவர் ராகுலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பல ஆண்டுகள் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். குமாரசாமி, மம்தா உள்ளிட்டோரும் ராகுலுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel