ஒரே இரவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், எனவே காவிரி விவகாரத்தில் மூன்று நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான அவகாசம் இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஆனால் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இன்று (மார்ச் 26) சென்னைப் பட்டினப்பாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு, காவிரி பிரச்னைக்காக திமுகவைவிட அதிகமாகப் போராடிய இயக்கம் அதிமுக. இதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து, 84மணி நேரம் வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. மேலும் காவிரிப் பிரச்னையில் வாஜ்பாய் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று மத்திய அரசையே கவிழ்த்தவர் என்று குறிபிட்ட ஜெயகுமார், தற்போது 15நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து போராடி வருகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை நேரத்துக்கு நேரம் நிறம் மாறும் அரசியல் செய்யக் கூடியவர்கள். தமிழக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்” என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே காவிரிப் பிரச்னையில் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென முதல்வர் கோரினார், ஆனால் ஒதுக்கப்படவில்லை. தற்போது மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 3நாட்களே உள்ள நிலையில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுமா என்று கேள்விக்கு, ஒரே இரவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மூன்று நாள் இருக்கிறது அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று பதிலளித்தார்.
இதுபோன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென அதிமுக எம்.பி.க்கள் 13நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் என்பது நம்முடைய உரிமை. அதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கத் தமிழக அரசு என்றுமே பின்வாங்காது” என்று கூறியுள்ளார்.�,”