tமுடிவுக்கு வரும் கர்நாடக அரசியல் குழப்பம்!

Published On:

| By Balaji

கர்நாடகாவில் 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் ஜூலை 18ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணிக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கொடுத்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில் ஜூலை 18ஆம் தேதி கர்நாடகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை பாஜக கொண்டுவரவுள்ளது. அதே தினத்தில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கவும் முடிவெடுத்துள்ளார். நேற்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், ‘‘நம்பிக்கை தீர்மானத்தை பாஜகவினர் இன்றே (நேற்று ஜூலை 15) எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேரவை அலுவல் கூட்டத்தில் கோரினர். ஆனால், ஜூலை 18ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல் அலுவலாக முதல்வர் குமாரசாமிக்கு நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் இதற்குச் சம்மதித்தாலும் அதுவரை அவையில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறி வெளிநடப்பு செய்தனர். இதனால் ஜூலை 18 வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது, கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பரபரப்புடன் காணப்பட்ட கர்நாடக அரசியல் விரைவில் க்ளைமாக்ஸை எட்டவுள்ளது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏ.க்கள் போக 98 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது. 225 இடங்களைக் கொண்ட கர்நாடகச் சட்டமன்றத்துக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்பட்டாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைப்போம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் மும்பை சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே கர்நாடகாவில் விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். அவர் நேற்று (ஜூலை 15) செய்தியாளர்களிடம் கூறுகையில், “குமாரசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது. குமாரசாமி முதல்வராகத் தொடர முடியாது என்பது அவருக்கும் தெரியும். சட்டமன்றத்தில் ஒரு நல்ல உரையாற்றிவிட்டு பதவியை ராஜினாமா செய்வார் என்று எண்ணுகிறேன். அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும். பாஜகவால் கர்நாடகத்தில் சிறந்த நிர்வாகத்தை வழங்க இயலும்” என்றார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share