மது விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மதுபான வகைகளின் விலை உயர்வு நேற்று (பிப்ரவரி 7) பகல் 12 மணி முதல் அமலுக்கு வந்தது. விஸ்கி, பிராந்தி, ரம் உள்ளிட்ட மதுவகைகளின் விலை 10 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குவாட்டர் ரூ.10, ஆஃப் ரூ.20, ஃபுல் ரூ.40 விலை உயர்ந்துள்ளது. அதுபோலவே பீர் வகைகளில் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென மது விலை உயர்த்தப்பட்டதால் குடிமகன்கள் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இதனிடையே மதுபானங்களின் உயர்த்தப்பட்ட விலைப் பட்டியலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பார்வையாளர்களுக்கு தெரியும்படி ஒட்ட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மண்டல மேலாளா்கள், மாவட்ட மேலாளா்களுக்கு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் கிர்லோஷ் குமார் அனுப்பியுள்ளார்.
அரசின் வருவாயில் டாஸ்மாக் விற்பனை மூலம் வரும் வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களின்போது மது விற்பனை பல நூறு கோடிகளைத் தொடும். கடந்த பொங்கல் விழாவின்போது 3 நாட்களில் ரூ.610 கோடிக்கு மது விற்பனை நடந்தது. 2018-19 நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் மூலம் 31,157 கோடி ரூபாய் தமிழக அரசு வருமானம் ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் செலவினங்கள் அதிகரித்து வருவதால், அதனை ஈடுகட்டுவதற்கான ஆலோசனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனவரி இறுதியில் நடந்துள்ளது. அதில் அமைச்சர் தங்கமணி மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, “மது விலைகளை உயர்த்தி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆகவே, தற்போது மது விலைகளை உயர்த்தலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் போராட மாட்டார்கள். அரசுக்கும் கூடுதல் வருமானம் வரும்” என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் மதுபான விலையை உயர்த்துவது என்ற முடிவுக்கு முதல்வர் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “பூரண மதுவிலக்கு என்பதுதான் அரசின் கொள்கை. ஆனால், தற்போது இருக்கும் சூழலில் அரசின் வருவாயை பெருக்கும் விதமாக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வருடத்திற்கு 3-கோடியை அரசு செலவிடுகிறது. முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர், வருடத்திற்கு வருடம் மதுக்கடைகளை குறைப்போம். இந்த விலை உயர்வின் மூலம் அரசுக்கு 2500 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.�,