தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, அவரது அரசியல் தற்போது எடுபடவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் நாளை திறக்கப்படவுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் நிலவி வருகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று(பிப்ரவரி 11) கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “பசியில்லா மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் தமிழகம் இருக்கிறது. 2020 என்ற தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும்வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இத்தகைய திட்டங்களைக் கொண்டுவந்த புரட்சிகர பெண்ணாக ஜெயலலிதா இருந்துள்ளார். எனவே, அவரது படத்தை சட்டப்பேரவையில் திறப்பதில் தவறில்லை. மேலும், மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் விஜயகாந்த். அவர் அரசியல் தற்போது எடுபடவில்லை. மறைந்தவரைப் பற்றி விமர்சிப்பது என்பது தவறான ஒன்று. அதுவும் பெண்ணைப் பற்றி விமர்சிப்பது என்பது தவறானது” என்று குறிப்பிட்டார்.�,