பாலியல் வல்லுறவு வழக்குகளில் போலீசாருக்குப் பயிற்சியளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 20) தனது பழைய தீர்ப்பு ஒன்றின் நகலை போலீஸ் டிஜிபிக்கு வழங்குமாறு தனது பதிவாளருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் நகலைக் கொண்டு, பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை எவ்வாறு விசாரிப்பதென்று போலீசாருக்கு பயிற்சி வகுப்புகள் எடுக்கும்படி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை நீதிபதி எம்.வி.முரளிதரன் வெளியிட்டுள்ளார். 2007ஆம் ஆண்டில் வி.வெங்கடேசன் என்பவர் ஒரு இளம் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் வல்லுறவு செய்ததாக இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவியல் மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு, திருவண்ணாமலை நீதிமன்ற அமர்வு வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கின்படி, குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசன், பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குள் நுழைந்து இரண்டு சிறுமிகளின் முன்பாக பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படுகிறது. முதன்முதலாக இத்தகவலை அப்பெண் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஐந்து நாட்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் குறித்து விளக்கமளிக்கப்படவில்லை. பெற்றோருக்குப் பதிலாக பக்கத்து வீட்டாரிடம் தகவல் தெரிவித்தது குறித்தும் விளக்கமளிக்கப்படவில்லை. மேலும், விசாரணை அதிகாரி எதிர்மனுதாரரை 2007 அக்டோபர் 19ஆம் தேதியன்று கைது செய்துள்ளார். ஆனால் அவர் 11 மாதங்களுக்குப் பிறகே மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரோ சம்பவத்துக்கு 18 நாட்களுக்குப் பிறகு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு பிறகு 24 மணி நேரத்துக்குள் ஆதாரங்கள் கண்டறியப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 18 நாட்கள் ஆகிவிட்டதால் தடையங்கள் மறைந்திருக்கும்.
மருத்துவச் சோதனையின்போது, தான் ஒரு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஆகையால், இந்த வழக்கை விசாரித்த அதிகாரியின் விசாரணை நம்பிக்கையளிப்பதாக இல்லையென்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். “வழக்கு சீர்குலைந்ததற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியின் போக்கே காரணம் என்று பதிவுகளின் வாயிலாகத் தெரிகிறது. விசாரணை அதிகாரி உரிய கவனம் செலுத்தாமல், மெத்தனமாக விசாரணை நடத்தியுள்ளார்” என்று கூறிய நீதிபதி, இந்த வழக்கைப் பயன்படுத்தி போலீசாருக்குப் பயிற்சியளிக்கும்படி அறிவுறுத்தினார்.�,