புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கும் உச்சகட்ட மோதல் நடந்துவருவதாக மாநிலம் முழுவதும் பேசி வருகின்றனர்.
காங்கிரஸிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் ஆட்சியையும் பிடித்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்ய நாராயணசாமியால் களமிறக்கிவிடப்பட்டவர்தான் தற்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம்.
அதன்பிறகு 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று சுயேச்சை ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சியமைக்கத் தயாரானபோது நமச்சிவாயம்தான் முதல்வர் என்று அனைத்துக் கட்சியினரும் எதிர்பார்த்தனர். நமச்சியவாயமும், தான்தான் முதல்வர் என்று நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், தேசிய அரசியலில் கவனம் செலுத்திவந்த நாராயணசாமி டெல்லியின் ஆதரவை வைத்து மெதுவாக காய் நகர்த்தி, நமச்சிவாயத்தையும் சமரசம் செய்து புதுவை முதல்வராகப் பொறுப்பேற்றார். நமச்சிவாயத்துக்குப் பொதுப் பணித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவர்தான் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராகவும் தொடர்கிறார்.
**நமச்சிவாயம் அணி வெற்றி**
அண்மையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு ஜனநாயக முறைப்படி உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அணியும், பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அணியும் கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட்டனர். அதில் 80 சதவிகிதத்துக்கு மேலாக நமச்சிவாயம் அணியினர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் பலமாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நமச்சிவாயம் ஆதரவாளர் பூக்கடை ரமேஷும், நாராயணசாமி ஆதரவாளர் லட்சுமிகாந்தனும் போட்டியிட்டனர். அதில் ரமேஷ் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நமச்சிவாயத்தின் அரசியல் வளர்ச்சியை விரும்பாத முதல்வர் நாராயணசாமி, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறவினராக அனந்தராமனை நமச்சிவாயத்துக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார் என்று சொல்கின்றனர் புதுச்சேரி காங்கிரஸார். மேலும் நமச்சிவாயத்திடம் உள்ள மாநிலத் தலைவர் பதவியைப் பிடுங்கி அனந்தராமனிடம் கொடுக்க அன்புமணி மாமனாரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமி மூலமாக முதல்வர் நாராயணசாமி துணையோடு டெல்லியில் காய் நகர்த்தப்பட்டு வருவதாக நமச்சிவாயம் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
இப்படியாக முதல்வருக்கும், மூத்த அமைச்சருக்கும் நடக்கும் மோதலைப் பயன்படுத்திக்கொண்டு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மணக்குள விநாயகர் கல்லூரி உரிமையாளர் நாராயணசாமியை எம்.பியாக வெற்றி பெற வைக்க முயற்சி செய்துவருகிறாராம் ரங்கசாமி.
**நமச்சிவாயம் ஆதரவாளர்கள் ஆலோசனை**
இதற்கிடையில் புதுச்சேரி காங்கிரஸ் மீண்டும் பிளவுபடாமல் இருக்க முதல்வர் நாராயணசாமியை எம்.பி. பதவிக்குப் போட்டியிட வைக்கலாம் என்றும், நமச்சிவாயத்தை முதல்வராக்கலாம் என்றும் ஆலோசனைகள் நடந்துவருகிறதாம். ஆனால் தான் எம்.பி.யாகும் நிலை வந்தாலும் நமச்சிவாயத்துக்கு முதல்வர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்று நாராயணசாமி நினைக்கிறாராம். முதல்வர் பதவி நமச்சிவாயத்துக்கு கிடைக்கவில்லை என்றால் கட்சி பதவியை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம், எம்.பி. தேர்தலை எப்படி சந்திப்பார்கள் எனப் பார்ப்போம் என்று ஆலோசனையில் இருக்கிறார்களாம் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள். அவர்களைச் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறாராம் அமைச்சர் நமச்சிவாயம்.
காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்துக்குப் புகார் போனால் அந்தப் புகார்கள் உடனே நாராயணசாமி கைக்கு வந்துவிடுகிறதாம். அந்த அளவுக்கு டெல்லியில் செல்வாக்கு உள்ளதாம் நாராயணசாமிக்கு. இந்த முறை காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் பிளவுபட்டால் மீண்டும் கட்சியைப் பலப்படுத்த பல வருடங்கள் ஆகும் என்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.�,