புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம் கடந்த மே 31ஆம் தேதி சமர்ப்பித்தது. ஆனால், புதிய தேசியக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்படுவதாகவும், இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாணவர்கள் தாய்மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியைப் படிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இதற்கு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அதில் திருத்தம் செய்யப்பட்டது.
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஜூன் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கருத்து கூறலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரைவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் தரும் பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுதொடர்பாக நேற்று (ஜூலை 14) அவர் வெளியிட்ட அறிவிப்பில், “அன்னைத் தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி கல்வித் துறை வல்லுநர்களின் கருத்தினை அறிய திமுக விரும்புகிறது. எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட திமுக சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வுக் குழுவில் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக அரசு உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவர் அ. ராமசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தர் ம.இராஜேந்திரன், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், திமுக மாணவரணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சி.வி.எம்.பி.எழிலரசன், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத்தின் ரவீந்திரநாத், பொதுக் கல்விக்கான மாநில மேடை அமைப்பின் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தக் குழுவானது புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை திமுக தலைமைக் கழகத்திடம் அளிக்கவுள்ளது. அதனடிப்படையில் திமுகவின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட இருக்கிறது.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
�,”