சிவகங்கையில் 17 வயது இளம் பெண் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பஞ்சாயத்துகளில் சமரசம் செய்யப்படுகின்றன என எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழசேவல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் அச்சரம்பட்டி. இக்கிராமத்தில் வசித்துவந்த 17 வயது பெண் கடந்த 10ஆம் தேதியன்று, மாணிக்கம் என்பவரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொடூரமான முறையில் கழுத்து நெறித்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் நேற்று முன்தினம் (ஜூலை 11) சம்பவ இடத்திற்குச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். எவிடன்ஸ் கதிரிடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்பு கொண்டு பேசியபோது, களஆய்வில் கிடைத்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.
அச்சரம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிற அழகு என்பவரின் 17 வயதான மகளுக்கு வாய் பேச முடியாது. எட்டாம் வகுப்பு வரை இந்தப் பெண் படித்திருக்கிறார். கடந்த 10ஆம் தேதியன்று காலை சுமார் 9.30 மணியளவில் தோப்பு வீட்டில் தனியாக இருந்த இப்பெண்ணிடம் மாணிக்கம் என்கிற 27 வயது இளைஞர் அத்துமீறி உள்ளே சென்று கடுமையாகத் தாக்கி பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவிக்க கழுத்தை நெறித்து இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார். பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று ஒரு புதருக்குள் வீசியிருக்கிறார்.
காலை சுமார் 9.45 மணியளவில் கல்யாணி என்கிற பெண் அந்தப் புதருக்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது முனகல் சத்தம் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியில் புதருக்குள் சென்று பார்க்கும் போது அரை நிர்வாணத்தில் மயக்க நிலையில் அந்தப் பெண் கிடந்துள்ளார். கிராம அம்பலம் ரமேஷ் என்பவரிடம் கல்யாணி தகவல் தெரிவிக்க அதனடிப்படையில் ரமேஷ் அந்தப் பெண்ணின் தந்தையான அழகு அவர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கீழசேவல் காவல் நிலையத்தில் குற்றஎண்.51/2018 பிரிவுகள் 302, 376 இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தினை ராமநாதபுரம் டிஐஜி காமினி, எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை செய்திருக்கின்றனர்.
குற்றவாளியான மாணிக்கத்திடம் போலீஸார் விசாரணை செய்து நேற்று முன்தினம் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தப் பகுதியில் இதுபோன்ற பெண்கள் மீதான பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன என்றும், அவற்றை காவல் நிலையத்திற்குத் தெரிவிக்காமல் கட்டப்பஞ்சாயத்துப் பேசி அவர்களுக்குள் சமரசத்தை ஏற்படுத்துகின்றனர் என்று எமது களஆய்வில் தெரியவருகிறது.
பல பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் பஞ்சாயத்துகளில் பேசி முடிக்கப்படுகிற போக்கும் நடந்திருக்கிறது. இந்தப் பெண் கொலை செய்யப்பட்டதனால்தான் வழக்காகப் பதிவு செய்யப்பட்டு வெளியே தெரிய வந்திருக்கிறது.
தமிழகத்தில் பெண்கள் மீதான கொலைகளில் 35 – 40 சதவிகிதம் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அதன்பின் நடந்த கொலைகளாகவே இருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு நடத்தப்படுகிற கொலைகளில் 60 சதவிகிதம் 18 வயதிற்குட்பட்ட பெண்களாக இருக்கின்றனர்.
நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வராமல் காவல் நிலையத்திலேயே நிலுவையில் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார் எவிடன்ஸ் கதிர்.
பரிந்துரைகள்:
குற்றவாளியான மாணிக்கத்திற்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை பிணை கொடுக்கக் கூடாது. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் தமிழ்நாட்டில் சராசரியாக 7 சதவிகிதம் தான் தண்டனைக் கிடைக்கிறது. இதனால்தான் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே தமிழக முதல்வர் தலைமையில் உடனடியாக அனைத்து மாவட்ட எஸ்பி மற்றும் ஆட்சியரை அழைத்து கூட்டம் நடத்தி பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கினை விரைந்து விசாரணை செய்ய சிறப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் எவிடன்ஸ் கதிர் கூறினார்.
**ர.ரஞ்சிதா**�,”