இந்தியாவில் சீனாவை விட பள்ளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக இருந்தாலும், கல்வித் தரம் குறைந்தே காணப்படுகிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தரம் குறித்து நிதி ஆயோக் ஆய்வொன்றை மேற்கொண்டது. அதில், இந்தியாவில் கல்வித் தரத்தினைக் காட்டிலும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தொடக்கநிலை மற்றும் இடைநிலை மட்டத்தில் இந்தியாவில் அதிகளவிலான தனியார் பள்ளிகள் உள்ளன. 6 வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் மீதமுள்ள 29 சதவிகித மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. சீனாவை விட மூன்று மடங்கு அதிகம். ஆனால், இந்தியாவில் கல்வித் தரம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணங்கள் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியற்ற முறையில் இயங்கும் பள்ளிகள். நான்கு லட்சம் பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.1.5 லட்சம் மாணவர்கள் நிர்வாகம் சரியில்லாத பள்ளிகளில் படிக்கின்றனர்.
மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் கிராமப்பகுதிகளில் 100 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்தான் இருக்கின்றனர். இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் 10 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் 40 சதவிகித ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தானிலும் இதே நிலைமைதான்.
ராஜஸ்தான் , கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் 70 ஆரம்ப பள்ளிகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனர். பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 சதவிகித ஆரம்ப பள்ளிகளில் 50 க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதி பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்க தெரியவில்லை. 100 பேரில் 30 மாணவர்கள் மட்டுமே ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை செல்கின்றனர். 70 சதவிகித ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் குறித்த போதிய திறமையில்லை. மக்கள் தொகையில் ஒத்திருக்கும் சீனாவுடம் ஒப்பிடும்போது, பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கல்வியின் தரம் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,