Tபட்டாசுக்குத் தடை அவசியமில்லை!

Published On:

| By Balaji

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காற்று மாசுபடுவதால் பட்டாசு வெடிக்கவும் உற்பத்தி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என அர்ஜூன் கோபால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை கோரி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், பட்டாசுகளுக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தமிழகத்தின் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது, “இவ்வழக்கில் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாடை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை வருகிற 21 ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஆகஸ்ட் 21) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மத்திய அரசு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், “நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிக்கலாம். அதிக மாசு ஏற்படுத்தும் மற்றும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதித்தால் போதுமானது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தயாரிக்கும் பட்டாசுத் தயாரிப்பு தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்யலாம். மாசு ஏற்படுத்தாத பட்டாசுகள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தலாம்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share