Tபங்குத் தரகர்கள்: தகரமா, தங்கமா?

Published On:

| By Balaji

புதிய நிதிக் கதைகள் – 19

– முருகேஷ் பாபு

லட்சுமணனுக்குக்

கைலாசத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். ஊருக்குள் புதிதாக என்ன வந்தாலும் வாங்கிவிடுவார். அது காராக இருந்தாலும் சரி, கமர்கட்டாக இருந்தாலும் சரி… முதல் போணி கைலாசம்தான்!

“எப்படி கைலாசம் உன்னால இப்படி செலவழிக்க முடியுது?” என்று நேருக்கு நேராக கேட்கவே செய்தார். சின்ன சிரிப்போடு தாண்டிச் சென்றுவிட்டார்.

ஆனாலும் லட்சுமணன் விசாரிப்பதை நிறுத்தவில்லை. தோண்டித் துருவி கண்டுபிடித்தும்விட்டார்.

கைலாசத்தின் பணச் செழிப்புக்குக் காரணம் பங்குச் சந்தை முதலீடு!

தானும் அந்த முதலீட்டை இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு களத்தில் இறங்கினார் லட்சுமணன். யார் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடியும் என்ற விசாரணையில் இறங்கினார்.

“அதுக்குனு புரோக்கர் இருக்காங்க அய்யா… அவங்ககிட்டே ஒரு கணக்கு தொடங்கிட்டோம்னா அவங்க நமக்குத் தேவையான பங்குகளை வாங்கிக் குடுப்பாங்க… நாம விக்கச் சொன்னோம்னா வித்துக் கொடுப்பாங்க… அசத்துங்க… அசத்துங்க…” என்று ஊர்க்காரர் உற்சாகம் கொடுக்க, மளமளவென்று வேலையைத் தொடங்கினார்.

நகரத்திலேயே பளபளப்பாக ஏசி செய்யப்பட்டு ஆடம்பரமாக இருந்த புரோக்கர் ஆபீஸைப் பிடித்தார். உள்ளே நுழைந்த நொடியில் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து உபசரித்தார்கள். தன் நோக்கத்தைச் சொன்னார். மகிழ்ச்சியோடு கேட்ட நிறுவனத்தார் தங்கள் தரகு நிறுவனம் இந்திய அளவில் பிரபலமானது என்று பெரிய பெரிய படங்களைக் காட்டிப் பேசினார்கள். மகிழ்ந்துபோனார் லட்சுமணன். அவரைக் கவனிப்பதற்கு என்றே தனியாக ஒருவரை நியமித்தார்கள்.

இப்போது எந்த கம்பெனி பங்குகள் லாபம் தரக் கூடியவையாக இருக்கும் என்று கேட்டார். அவர்கள் சில பங்குகளைச் சொன்னார்கள். மொத்தமாக பெரும் தொகையைக் கொடுத்தார். இந்தப் பங்குகளில் முதலீடு செய்துவிடுங்கள் என்றார்.

மூன்றாம் நாள் தரகு நிறுவன ஆள் போன் செய்தார். “அய்யா… நீங்கள் வாங்கிய பங்குகள் லாபம் காட்டுகின்றன. விற்றுவிட்டால் லாபம் கிடைக்கும்…” என்றார்கள். உடனே விற்கச் சொன்னார். விற்றதால் கிடைக்கும் பணத்தை எந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்ற யோசனையை தரகு நிறுவன ஆளிடமே விட்டார். அவர் சில யோசனைகளைக் கொடுக்க, லட்சுமணனும் உடனடியாகச் செயல்படுத்தச் சொன்னார்.

முதல் மாத வங்கிக் கணக்கில் பங்குச் சந்தை வர்த்தகத்தின் மூலம் சிலபல ஆயிரங்கள் லாபம் காட்ட மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனார் லட்சுமணன். முதலீட்டில் இன்னும் வேகம் காட்டினார். லாபத்தையும் சேர்த்து முதலீட்டில் போட்டார்.

ஆனால், எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி அவருக்குத் தெளிவு இல்லை. தரகு நிறுவன ஆள் லட்சுமணனுக்கு ஏற்ற பங்குகள் என்று சிலவற்றைச் சுட்டிக் காட்டினார். லட்சுமணனும் முதலீடுகளைச் செய்தார்.

இந்த நிலை இன்னும் சிலகாலம் தொடர்ந்தது. ஒருநாள் லட்சுமணனை அழைத்த தரகு நிறுவன ஆள், “அய்யா… இன்னிக்கு இந்த பங்கு மிகமிகக் குறைவான விலையில் இருக்கிறது. நீங்கள் சம்மதம் சொன்னால் வாங்கிவிடுவேன்” என்றார். “என்ன தம்பி… என்னைக் கேட்கணுமா… எனக்கு நல்லதுனா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்… சும்மா சும்மா என்னைக் கேட்காதீங்க…” என்றார்.

அடுத்த முறை தரகு அலுவலகத்துக்குப் போனபோது அதை நினைவுபடுத்திய தரகு நிறுவன ஆள், “இந்தச் சிக்கலைத் தவிர்க்க உங்கள் சார்பில் நான் பங்குகளை வாங்க எனக்கு அனுமதி குடுத்துடுங்க. உங்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன்…” என்றார். லட்சுமணனும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். “அடுத்து அவ்வப்போது மெசேஜ் மட்டும் வரும். நீங்கள் இந்த நிறுவனப் பங்கை வாங்கியிருக்கிறீர்கள், இந்தப் பங்குகளை விற்றிருக்கிறீர்கள் என்று!” என்று சொன்னார் அந்த நபர்.

ஆறே மாதத்தில் நிலைமை தலைகீழானது. லட்சுமணனின் கணக்கில் இருந்த பங்குகள் விலைச் சரிவில் இருந்தன. போதிய லாபம் கிடைக்காததோடு நஷ்டத்தையும் காட்டத் தொடங்கியது. விசாரித்தபோது பங்குச் சந்தையே சரிவில்தான் இருக்கிறது என்றார்கள். ஆனால், அப்போதும் கைலாசம் மகிழ்ச்சியாக இருந்தார். லட்சுமணனுக்கு அதுதான் குழப்பமாக இருந்தது. மீண்டும் கைலாசத்திடம் போனார்.

“கைலாசம்… உன்னைப் பார்த்துதானப்பா நானும் பங்குச் சந்தையிலே முதலீடு செய்தேன்… ஆனா, இன்னிக்கு எனக்கு நஷ்டம்… நீ சிரிச்சுகிட்டே இருக்கியே… எப்படி..?” என்றார்.

“அய்யா… உங்களுக்குப் பங்குச் சந்தை பற்றி என்ன தெரியும்?” என்றார். லட்சுமணனுக்குப் புரியவில்லை.

“அதுல முதலீடு செய்தா லாபம் வரும்னு தெரியும்… வேறென்ன தெரியணுமப்பா… அதுக்குதான் தரகர்கள் இருக்காங்களே… அவங்கதான் அப்பப்ப அப்டேட் குடுத்துகிட்டே இருக்காங்களே…” என்றார்.

“அதனாலதான் நீங்க கவலையோட இருக்கீங்க… நான் சிரிச்சுகிட்டே இருக்கேன்… தரகர்கள் நாம முதலீடு செய்றதுக்கான கருவி. அவ்ளோதான்… மத்தபடி நாம எதிலே முதலீடு செய்யணும்னு நாமதான் முடிவு செய்யணும். நான் எந்த நிறுவனம் எப்படிச் செயல்படுது… அதன் பங்குகள் எப்படி ஏற்ற இறங்களைச் சந்திக்கும் என்று ஆலோசிக்கணும்… நாம சொல்லும் பங்குகளை அவங்க வாங்கிக் கொடுக்கணும்… அது மட்டும்தான் அவங்க வேலை. அங்கே நிறுத்தணும் அவங்களை. பங்குச் சந்தை பற்றி படியுங்க. தெரிஞ்சுக்கோங்க. நஷ்டத்தை ஈடு கட்ட முயற்சி பண்ணுங்க…” என்றார்.

லட்சுமணன் புதிய நம்பிக்கையோடு புறப்பட்டார்.

**தரகர்கள் செயல்பாடு: சில தகவல்கள்**

·

பங்குச் சந்தை போன்ற முதலீட்டுக்குத் தரகர்கள் முக்கியம். அவர்கள் மூலமாகத்தான் நாம் முதலீட்டைச் செய்ய முடியும்.

·

தரகர்களை முடிவு செய்யும் முன்னதாக நன்கு ஆலோசிக்க வேண்டும். இன்றைக்கு பல தரப்பட்ட தரகு நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் நமக்குச் சிறப்பான சேவை செய்யும் நிறுவனம் எதுவென்பதைக் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

·

தரகு நிறுவனம் என்பது நாம் சொல்லும் பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மட்டுமே அதிகாரம் பெற்றது. அப்படிப்பட்ட ஒப்பந்தம் மட்டுமே போடப்படும். அதைத் தாண்டி அவர்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்கக் கூடாது.

·

நாம் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் தரகர்களுக்கான கமிஷன் தொகை கிடைக்கும். சில நிறுவனங்கள் அதற்கு ஆசைப்பட்டு முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

·

நாம் முதலீடு செய்யச் சொல்லும் பங்குகளைப் பற்றித் தரகு நிறுவனத்துக்குக் கொடுத்த உத்தரவுக்கான ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் ஒன்றைச் சொல்ல, அவர்கள் வேறொன்றை வாங்கிவிடும் அபாயம் இருக்கிறது.

·

தரகர்கள் சொல்லும் முதலீட்டு ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வதில் தவறில்லை. ஆனால், முதலீட்டு முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்.

·

தரகு நிறுவனங்கள் எந்த விதமான முதலீட்டைச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கும். தினசரி வர்த்தகத்துக்கான ஆலோசனையை அவர்கள் சொன்னால் அது நமக்கு லாபம் தருமா என்று யோசித்து முடிவெடுங்கள்.

·

நம் முதலீடுகளைச் செய்யும்போது தரகர்கள் தங்கள் நிறுவன நலனையும் மனதில் வைத்தேதான் செய்வார்கள். ஆனால், அவர்கள் ஒருபக்கம் ஆலோசனைகளை வழங்கினாலும் நம் பங்குக்கு நாமும் முதலீடுகளை ஃபாலோ செய்ய வேண்டும்.

·

தரகு நிறுவனங்களை நம் கண்காணிப்பில் வைக்க வேண்டும். அவர்கள் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதைக் கண்கானிப்பது நல்லது.

[கூழுக்கும் மீசைக்கும் பங்கமில்லை!](https://minnambalam.com/k/2019/03/05/13)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share