நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) வரை கொள்முதல் செய்த நெல்லை அரைத்து அரிசியாகத் தந்துவிட்டு நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(செப்டம்பர் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 112 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டதன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் அச்சமடைந்துள்ள உழவர் அமைப்புகள் செப்டம்பர் 3ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுபற்றி விளக்கம் அளிக்காமல் அமைதி காப்பது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
“மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே நேரடி கொள்முதலையும், பொதுவிநியோகத் திட்டத்தையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் நேரடி பயன் மாற்றத் திட்டம் ஆகும். உணவு மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தை பல மாநிலங்களில் சோதனை அடிப்படையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நியாயவிலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்த பயனாளிகளுக்கு, புதிய முறைப்படி பணமாக மானியம் வழங்கப்படும் என்பதால் நியாயவிலைக் கடைகளே தேவையிருக்காது. அதனால் வேளாண் விளைபொருட்களைக் கொள்முதல் செய்ய வேண்டியிருக்காது. இத்திட்டத்தைத் தமிழகத்திலும் நடைமுறைப் படுத்தும் நோக்குடன் தான் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது” குறிப்பிட்டுள்ளார்.
‘நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லைத் தனியார் வணிகர்களிடம் தான் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு நெல் உள்ளிட்ட விளைபொருட்ளை அடிமாட்டு விலைக்கு வாங்குவர். அதேநேரத்தில் அரசு நெல் கொள்முதல் செய்யாவிட்டால் நியாயவிலைக் கடைகளில் வழங்குவதற்கு அரிசி கிடைக்காது. இதனால் நியாயவிலைக் கடைகளை மூட வேண்டியிருக்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் வாழவே முடியாமல் போய் விடும். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். மத்திய அரசே அவ்வாறு ஆணையிட்டிருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மாநில அரசே அதன் சொந்த செலவில் நெல் கொள்முதல் நிலையங்களை நடத்த வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
**முத்தரசன்**
“விவசாய, உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசு இதுநாள் வரை கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவில்லை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சாமிநாதன், உற்பத்தி செலவுடன் 50 சதவிகிதம் சேர்த்து விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று கூறிய பரிந்துரையை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையை, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தான் விவசாயிகள் பெற்று வந்தனர்.
இந்தச் சூழலில் மத்திய அரசின் இந்நடவடிக்கை என்பது அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையையும், விவசாயிகளுக்குக் கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்யக் கூடிய மிக மோசமான செயலாகும். எனவே, அரசின் முடிவை திரும்பப் பெற்று நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கவும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்யவும், அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,”