Tநிர்மலா தேவி: முருகன் மனைவி மனு!

Published On:

| By Balaji

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார் முருகனின் மனைவி சுஜா.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலா தேவி. சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இவர் கைதானார். நிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி பலமுறை மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இவர்கள் மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி நிர்மலா தேவி மற்றும் முருகன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் தினந்தோறும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். நிர்மலா தேவியைத் தனது கணவர் முருகன் ஒருமுறை கூட தனிப்பட்ட முறையில் சந்தித்தது இல்லை எனவும், ஆனால் விசாரணை அதிகாரிகள் தனது கணவர் மீது பொய்ப் புகார்களை அடுக்குவதாகவும், அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் கைது செய்யப்பட்டு 120 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள சுஜா, இந்த நிலை தொடர்ந்தால் தனது குடும்பம் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share