Tநஷ்டத்திற்கு காரணம் நடிகர்களே!

Published On:

| By Balaji

அன்புச் செழியனால் இதுவரை தனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை ஆனால் சில நடிகர்களால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ரோஜா கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சசிகுமாரின் உறவினரும் இணை தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது குடும்பத்தினரை அன்புச் செழியன் தரக்குறைவாக பேசியதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அசோக்குமாருக்கு ஆதரவாக திரை நட்சத்திரங்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இயக்குநர் பாலா, சுந்தர்.சி, தேவயானி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக பேச தொடங்கிய நிலையில் இயக்குநர் சுசீந்திரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அன்புச் செழியனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீன் ஒரு முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் காஜா மொய்தீன் [வீடியோ](https://www.facebook.com/Tamil.News.Reviews/videos/vb.325775750767300/1788331401178387/?type=2&theater) ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 18 ஆண்டுகளாக நானும் அன்புச் செழியனும் நல்ல நண்பர்கள். அவரால் நான் எப்போதும் பாதிக்கப்பட்டதில்லை. சொல்லப் போனால் எனக்கு பணக்கஷ்டம் வரும் போதெல்லாம் அவர் தான் உதவுவார். அவரை பற்றி தவறாக பேசுவது வேதனையளிக்கிறது. அவரை இன்று திட்டுபவர்கள் எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் அவரால் இலாபம் அடைந்தவர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.

“திட்டமிட்டப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பை முடித்தால் நஷ்டமே வராது. ஆனால் சில நடிகர்களால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. பெரிய நடிகர்களால் தான் நஷ்டமே தவிர கந்து வட்டியால் ஒரு நஷ்டமும் இல்லை. அன்புச் செழியன் ரொம்ப நல்லவர். அவரை போன்ற ஒரு பைனான்சியர் இல்லை என்றால் திரைத்துறையே ஸ்தம்பித்துவிடும்” என்று கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ஜனா படத்தை தயாரித்த காஜா மொய்தீன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை முயற்சி செய்தது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனா படத்தை எடுத்து முடிக்க இரண்டரை ஆண்டுகள் ஆனதால் அதற்காக வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. படம் காலதாமதம் ஆனதற்கு அஜித் தான் காரணம் என்று காஜா மொய்தீன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel