நடிகையும், மாடலுமான அஞ்சலி ஸ்ரீவஸ்தவா (29) மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது கடந்த இரு தினங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அலகாபாத்தை சேர்ந்த அஞ்சலி, மும்பை ஜுஹு பகுதியில் தங்கி சினிமாவில் நடித்து வந்தார். மாடலிங்கும் செய்து வந்தார். சில போஜ்புரி படங்களில் நடித்துள்ள அஞ்சலியின் உறவினர்கள் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அஞ்சலி வீட்டுக்கு வந்து பார்த்தனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் உடலை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
’என் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டார். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்’ என்று அஞ்சலியின் அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் மன அழுத்தம் காரணமாகவே அஞ்சலி, தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.’அஞ்சலியின் வீட்டைச் சுற்றி இருக்கும் சிசிடிவி கேமராவை பரிசோதித்தோம். யாரும் அவர் வீட்டுக்குச் செல்லவில்லை. அதனால் அது தற்கொலைதான். பட வாய்ப்பு கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் அஞ்சலி. இது அவர்கள் பெற்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை. மன அழுத்தம் காரணமாகவே அவர் இறந்திருக்க வேண்டும்’ என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது புதிதல்ல. தங்களது வாழ்வில் சிறந்த நடிகையாக வேண்டும் என்ற கனவுகள், ஆசைகளுடன் பல பேர் திரைத்துறைக்கு வருகிறார்கள். ஆனால் இங்கு வந்த பின் திரைப்படத்தில் நடிப்பதென்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை என புரிந்து சிலர் மற்ற வேலைகளைப் பார்க்க செல்கின்றனர். ஆனால் சிலரோ, ஒரு சிலரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கித் தொடர்ந்து இதில் பயணிக்க விரும்புகிறார்கள். அதற்கான சூழ்நிலைகளும் , வாய்ப்புகளும் கிடைக்காமல் போகும் போது விரக்தியில் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். திரைத்துறையில் நடிகையாகவோ அல்லது நடிகராகவோ கால் ஊன்றுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது என்பதை அனைவரும் அறிந்தால் இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருப்பதைத் தடுக்க முடியும்.�,