Tதெற்காசியாவை நோக்கும் இந்தியா!

Published On:

| By Balaji

உலக அரசியல் பழகு!-6 ஆரா

இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டது பல தரப்பில் புருவம் உயரவைத்த நடவடிக்கை. போன ஆண்டு வரை வெளியுறவுச் செயலாளராக இருந்தவரை இந்த ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராக ஆக்கிவிட்டாரே மோடி என்ற வியப்புக் குரல்கள் பல திசைகளிலும் கேட்கின்றன.

அமைச்சர் என்பதற்கும் செயலாளர் என்பதற்கும் என்னதான் வேறுபாடு? செயலாளர் என்பவர் முழுக்க முழுக்கக் கணக்கீடுகளின் அடிப்படையில் முடிவெடுப்பவர். ஆனால் மக்களோடு உறவுடைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகிற ஒருவர்தான், ஒரு பிரச்சினையில் மக்களின் நிலை என்ன என்பதை யோசித்து முடிவெடுப்பார் என்று ஒரு மதிப்பீடு உண்டு.

ஆனால், அரசுத் துறையைச் சார்ந்தவர்களிடம் கேட்டால், வெளியுறவுத் துறை போன்ற மிக முக்கியமான துறைக்கு அமைச்சராக இருப்பவர்களுக்கு முதல் தகுதி உள்ளூரிலிருந்து உலகத்தையும், உலகத்திலிருந்து உள்ளூரையும் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். உலகத்தின் பிரச்சினைகள் உள்ளூரையும், உள்ளூர் பிரச்சினைகள் உலகத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிந்தவர்களே இந்திய வெளியுறவுத் துறையின் விற்பன்னர்களாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில் இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்து தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஜெய்சங்கர், மோடியை இந்த அளவுக்குக் கவர்ந்ததற்குக் காரணம் என்ன? மோடி தன் முதல் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜை அமர்த்தியிருந்தாலும் முழுக்க முழுக்க ஜெய்சங்கரே வெளியுறவுத் துறையில் வீரியமாகச் செயல்பட்டார் என்பது கடந்த காலத்தைக் கவனித்தாலே தெரியும்.

துறை ரீதியான திறமை கொண்டவர் என்பது மட்டுமே வெளியுறவுச் செயலாளராக இருந்த ஜெய்சங்கரை வெளியுறவு அமைச்சராக ஆக்கியிருக்க முடியுமா? அதையும் தாண்டி மோடிக்கு அவர் மீது ஒர் ஈர்ப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமே?

“இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளம் நீண்ட நாட்களாக, தான் வகித்துவந்த, ‘உலகின் ஒரே இந்து நாடு’ என்ற பட்டத்தை தனது புதிய அரசியல் சாசனம் மூலம் துறந்து மதசார்பற்ற நாடாக மாற முடிவெடுத்தபோது 2015ஆம் ஆண்டு ஜெய்சங்கரின் பல விளையாட்டுகள் மோடியின் சார்பாக நேபாளத்தில் அரங்கேறின. அதன் விளைவாகத்தான் மோடியின் கேபினட்டில் ஜெய்சங்கர் இடம் பிடித்திருக்கிறார். அது மட்டுமல்ல மோடி முதல் முறையாகப் பிரதமர் பதவியேற்றபோது அவரை உலகத் தலைவர்கள் பலருக்கும் உற்ற தோழனாக்கி உலக அளவில் மோடியின் செல்வாக்கைத் தனது அனுபவத்தின் மூலமும், ராஜதந்திரம் மூலமாகவும் உயர்த்திக் காட்டியவர் ஜெய்சங்கர். இதனால் அப்போதே ஜெய்சங்கரை மனதுக்குள் டிக் செய்து வைத்துவிட்டார் மோடி” என்கிறார்கள் டெல்லி அரசியல் நோக்கர்கள்.

வெளியுறவுச் செயலாளராகப் பதவி வகித்து ஓய்வுபெற்ற ஜெய்சங்கர் டாடா சன்ஸ் குழுமத்தின் குளோபல் கார்ப்பரேட் விவகாரத் தலைவராகப் பணியில் சேர்ந்துவிட்டார். அதாவது இது நாள் வரை இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் என்ற பதவியின் மூலம் தான் பெற்றுவந்த உலகத் தொடர்புகள், பல்வேறு நாடுகளுடனான அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் டாடா சன்ஸ் குழுமத்துக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தார். அவரை மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்து அரசுக்கே இழுத்து அனுபவங்களை இந்திய அரசுக்கே பயன்படுத்த முடிவு செய்ததற்காக மோடிக்கு நன்றி சொல்லலாம்.

“நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்க அழைக்கப்படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு முன்னோடியான வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அடிச்சுவடுகளில் என் பயணத்தைத் தொடருவேன். உலகத்தில் இந்தியர்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் ஓடிச் சென்று உதவுவேன். பாதிக்கப்படாமல் காப்பேன்” என்று கூறியுள்ளார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் முதல் பிரகடனம் என்று ஒன்றைச் சொல்லலாம்.

“தெற்காசிய பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகளை வலுப்படுத்தி, பொருளாதார விவகாரங்களில் இந்தியாவுடனான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுதான் எனது முன்னுரிமைப் பணியாக இருக்கும்” என்று கூறியுள்ளார் ஜெய்சங்கர்.

ஆம். ஜெய்சங்கரின், அதாவது மோடியின், இப்போதைய முக்கிய இலக்கு தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்குள் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பது, அதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகள் எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்வது. இதில் பாகிஸ்தானை நம்ப முடியாது. பாகிஸ்தான் சீனாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிற நாடு. இலங்கை மீதும் சீனா பெருமளவிலான பாசத்தைப் பொழிந்துவருகிறது. இலங்கையில் இருக்கிற காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் போலீஸ் ஜீப்புகள்கூட சீனா கொடுத்ததுதான்.

இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தி, இலங்கையைத் தன் பக்கம் கொண்டுவந்து தெற்காசியப் பிராந்தியத்தின் ராஜாவாக நிரந்தரமாக முடிசூடுவதுதான் இந்தியாவின் நோக்கம். இதை மனதில் கொண்டுதான் தெற்காசிய நாடுகளிடையே பொருளாதார ஒருங்கிணைப்பை இந்தியா ஏற்படுத்தும் என்கிறார் ஜெய்சங்கர்.

பிரதமர் மோடி மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் தன் முதல் பயணத்தை தொடங்கும் முன்னரே பூட்டானுக்கு முதல் பயணத்தைத் தொடங்கிவிட்டார் ஜெய்சங்கர்.

வெளியுறவுக் கொள்கையை வெறும் பொருளாதாரம் மட்டும்தான் தீர்மானிக்குமா? தீர்மானிக்க வேண்டுமா?

(அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்)

[பகுதி-1](https://minnambalam.com/k/2019/05/04/9)

[பகுதி-2](https://minnambalam.com/k/2019/05/11/17)

[பகுதி-3](https://minnambalam.com/k/2019/05/18/19)

[பகுதி-4](https://minnambalam.com/k/2019/05/25/24)

[பகுதி-5](https://minnambalam.com/k/2019/06/01/14)

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)

**

**

[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share