திருமணக் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 5 வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
என்.ஆர்.ஐ. கணவர்களைத் திருமணம் செய்து பரிதவிக்கும் இந்திய மனைவிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சமீபத்தில் தகவல் வெளியாகின. வெளியுறவுத் துறையின் கணக்கீட்டின்படி, 2015 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சுமார் 3,328 திருமணக் குற்றப் புகார்கள் இந்தியப் பெண்களிடமிருந்து வந்ததாகத் தெரியவந்தது.
அது போன்று, ஏமாற்றுத் திருமணம், திருமணம் செய்த பெண்களைக் கைவிடுதல், குடும்ப வன்முறை உள்ளிட்டவை தொடர்பான புகார்களில் சிக்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் மீது கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து தப்பிப்பதற்காக பலர் வெளிநாடுகளிலேயே வசித்துவருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இன்று (மே 30) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்துக்கு லுக்அவுட்(தேடப்படும் குற்றவாளிகள் பட்டியல்) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
என்.ஆர்.ஐ. கணவர்கள் சம்பந்தப்பட்ட திருமணக் குற்றங்கள் தொடர்பாக 40 புகார்கள் வந்துள்ளதாகவும். அவர்களில் 6 பேரின் பாஸ்போர்ட்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம். இதனை ஏற்று 6 பேரில் 5 பேரின் பாஸ்போர்ட்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.�,