–
சூர்யா நடிப்பில் என்ஜிகே, காப்பான் ஆகிய படங்கள் தயாராகிவரும் நிலையில் சமூக விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.
தமிழக அரசு ஜனவரி 1ஆம் தேதி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. இயற்கை வளத்தை அளிக்கும் பிளாஸ்டிக்கின் தீங்கு குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக தமிழக அரசுடன் இணைந்து சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மூலம் ‘மாறலாம் மாற்றலாம்’ என்ற நான்கு நிமிட குறும்படத்தை தயாரித்து நடித்துள்ளார்.
பள்ளிக் குழந்தைகளிடம் வகுப்பறையில் பிளாஸ்டிக்கின் தீங்கு குறித்து சூர்யா உரையாடும் காட்சிகள் குறும்படத்தில் இடம்பெற்றுள்ளன. சில அனிமேஷன் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் சூர்யா மாணவர்களோடு செல்ஃபி எடுக்கும் காட்சியோடு குறும்படம் நிறைவடைகிறது. ‘தும்பா’ படத்தின் இயக்குநர் எல்.ஹெச். ஹரிஷ் ராம் இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைவாணன் படத்தொகுப்பு செய்ய, ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார்.
சமூகத்தில் விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டிய கருத்துக்கள் திரைத்துறையினர் மூலம் கூறப்படும் போது உடனடியாக மக்களைச் சென்றடைகிறது. அந்த வகையில் இந்தக் குறும்படமும் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
[மாறலாம் மாற்றலாம் குறும்படம்](https://www.youtube.com/watch?v=hgbKp8RkGUc)
�,