18ஆவது ஆசியப் போட்டித் தொடரின் மூன்றாவது நாளான இன்று இந்தியா செபக் டக்ரா போட்டியில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது. கைப்பந்து ஆட்டத்தை கால்களால் எத்தி விளையாடுவதைப் போன்ற அமைப்பைக் கொண்டுள்ள இந்த செபக் டக்ரா போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அரையிறுதி ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் வீழ்ந்து இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
**துப்பாக்கி சுடுதலில் குவியும் பதக்கம்**
துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் 16 வயதான சவுரப் சவுத்ரி, தங்கம் வென்று இன்றைய பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 50 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் பங்கேற்ற சஞ்சீவ் ராஜ்பூத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஹரியானாவைச் சேர்ந்த 37 வயதான ராஜ்பூத் வெறும் 0.4 புள்ளியில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது இவரது நான்காவது பதக்கமாகும்.
முன்னதாக ஆசிய விளையாட்டு தொடரில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற சவுரப் சவுத்ரிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சார்பாக அரசு வேலையும், ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டது.
**ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா ஏமாற்றம்**
இம்முறை ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்டவர் தீபா கர்மாகர். முன்னதாக இவர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு நூலிழையில் நான்காம் இடத்தைப் பிடித்திருந்தார். இம்முறை இவர் கண்டிப்பாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் Individual Vault பிரிவில் தீபா, 7ஆவது இடத்தையே பிடித்து இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை நழுவ விட்டார். இந்தப் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ப்ரணதி நாயக், அருணா ரெட்டி இருவரும் முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இருப்பினும் பேலன்ஸ் பீம் பிரிவில் தீபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறார். ஒட்டுமொத்தப் பிரிவில் இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
**டென்னிஸ்: காலிறுதியில் இந்தியா**
டென்னிஸ் போட்டியில் இரட்டையருக்கான பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் இணை தாய்லாந்தின் கட்சப்பணன்-ட்ராங்சரோசைக் இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ரோகன் போபண்ணா- அங்கிதா ரைனா ஜோடி கொரியாவின் லீ ஜீமூன்-நரி கிம் ஜோடியை 6-3, 2-6, 11-9 என்ற செட் கணக்கில் வென்றது.
**கபடி: அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்**
ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று தாய்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 49-30 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இதுவரை நான்கு ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இந்தியா, 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
**நூலிழையில் தவறிய பதக்கம்**
முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆசிய போட்டி தொடரில் பங்கேற்று வரும் இந்திய நீச்சல் வீரர் விர்தவால் காடே நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். இன்று நடைபெற்ற 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 22.47 நிமிடத்தில் இலக்கைக் கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜப்பானின் சுனிசி நகாவோவுக்கும் இவருக்குமான நேர வித்தியாசம் வெறும் 0.01 வினாடிகள் மட்டுமே.
**மல்யுத்தத்தில் இரண்டாவது பதக்கம்:**
மல்யுத்தப் போட்டியில் 68 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் கக்ரன் திவ்யா, சீனாவின் சென் வென்லிங்கை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 10-0 என்ற கணக்கில் திவ்யா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.
�,”