�மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணை நிலை ஆளுநர், நகரில் தொடர்ந்து குவிந்து வரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற மோதல் முதல்வர் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இதற்கிடையே டெல்லியில் அதிக அளவிலான குப்பைகள் குவிந்திருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்யாத 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தது.
இவ்வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தபோது, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத டெல்லி துணை நிலை ஆளுருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணை நிலை ஆளுநர், அதாவது, தனக்குத்தான் அதிகாரம் உள்ளது, தான் தான் சூப்பர்மேன் என்று கூறி வரும் ஆளுநர் குப்பைகளை அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு ஆளுநர் தரப்பில், குப்பைகளை அகற்றுவது மாநகராட்சி பணியாகும், அதனைக் கண்காணிப்பது தான் ஆளுநரின் பணியாகும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அரசும், மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.�,