தனக்கு யாரைப் பார்த்தும் போட்டி, பொறாமை, பயம் இல்லை எனக் கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சீமராஜா திரைப்படத்தின் ட்ரெய்லரில் கடைசியாக அமைந்திருக்கும் அந்த மூன்று ஷாட்டுகள் பற்றி நிறைய பேச வேண்டாம் என்று பொன்ராம் சார் சொல்லி இருக்கிறார். அதை எடுப்பதற்காக இந்த டீம் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ட்விட்டரில் பார்க்கும்போது, அந்தக் காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பாகுபலி என்று போட்டிருந்தார்கள். அதைவிடப் பெரிய அங்கீகாரம் கிடைக்காது என நினைக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவையும், உலகையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. அந்த மாதிரி ஷாட் நாங்கள் எடுத்துவிட்டோம் என்பதே மிகப்பெரிய பெருமை.
படத்தில் தமிழ் மன்னனாக நடித்திருப்பது ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது . தமிழ் மன்னர்கள் பற்றி புத்தகத்தில்தான் நிறைய படித்திருக்கிறேன். என்னை அந்த உருவமாக கற்பனைக் கூடப்பண்ணி பார்க்க முடியவில்லை. நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது அந்தக் காட்சிக்காக.
எல்லோருடைய வேலைகளையும் மதிக்கிறேன். எல்லோருடைய படங்களையும் சந்தோஷமாகப் பார்க்கிறேன். எனக்கு யாரை பார்த்தும் போட்டி, பயம், பொறாமை இல்லை. எனக்குக் கிடைத்திருக்கிற இந்த வாய்ப்பை, திரையில் இன்னும் வேற மாதிரி எப்படி காட்ட வேண்டும் என்ற முயற்சி நோக்கி போய்க்கொண்டிருக்கும் வேளையில் முக்கியமான படம் இந்த சீமராஜா. இந்த முக்கியமான படம் உங்கள் அனைவருக்கும் பிடித்து வெற்றிப் படமாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
சீமராஜா திரைப்படம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது.
�,”