சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக ஆறு பேர் செயல்படுவார்கள் என பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்..
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, நேற்று ஜூன் 14ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியதும், முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதன் பின்னர், கேள்வி நேரத்தின்போது பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். அதையடுத்து, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தபோது, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு பேசியதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து அமளி ஏற்பட்ட நிலையில் திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஜி.எஸ்.டி. மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில், பேரவைத் தலைவர் தனபால் சட்டப்பேரவையில் மாற்றுத் தலைவர்கள் குறித்து தெரிவித்ததாவது: “சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் இல்லாத நிலையில், பேரவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்கள் யார், யாரென அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக சு.ரவி (அரக்கோணம்), பி.எம்.நரசிம்மன் (திருத்தணி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), வி.வி.ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு), மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி) ஆகியோர் செயல்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
சபாநாயகர் அறிவித்துள்ள ஆறு எம்.எல்.ஏ-க்களில் வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன், ராஜன் செல்லப்பா, நரசிம்மன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவளித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.�,