ட்ரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் கோலிக்கு தற்போது மற்றொரு பெருமையும் கிடைத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும் கேப்டன் கோலியின் சதம், அவருக்கு டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக நம்பர் 1 இடத்தைப் பெற்றுத்தந்தது. அதே ஆட்டத்திறனை இரண்டாவது டெஸ்டுக்கும் எடுத்துச் செல்லத் தவறியதால் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்தார். தற்போது மூன்றாவது போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் முறையே 97, 103 ரன்கள் குவித்ததன் மூலம் அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்துள்ளது. இதன்மூலம் 937 புள்ளிகளுடன் மீண்டும் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது வாழ்நாளின் சிறந்த புள்ளிகளாக அமைந்தது மட்டுமின்றி தரவரிசையில் ஒரு இந்தியரின் அதிகபட்ச புள்ளியாகவும் பதிவாகியுள்ளது.
விராட் கோலி இனிவரும் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இதுவரை இந்தப்பட்டியலில் அதிகபட்ச சாதனையாக உள்ள டான் பிராட்மேனின் 961 புள்ளிகளை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.
பந்துவீச்சில் அசத்திய ஜாஸ்ப்ரித் பும்ரா 37ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் இரண்டு இடங்கள் பின்தங்கி 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என இரு துறைகளிலும் சீராக ஆடியிருந்த ஹர்திக் பாண்டியா ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் 27 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
�,”