சேது ராமலிங்கம்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருநாள் மாலையில் திடீரென்று கூட்டம் அதிகரிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஏந்திக்கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனா்.
மருத்துவர் வந்து குழந்தைகளைப் பரிசோதிக்கும்போது அந்தக் குழந்தைகள் ஒருவகை ஆஸ்துமா ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுகிறது. அந்த ஆஸ்துமா ஒவ்வாமையை ஏற்படுத்தியது ஆல்ட்டர்நேரியா ஆல்ட்டர்நெட்டா என்ற புதிய வகை பூஞ்சை என்பது மருத்துவப் பரிசோதனையின்போது கண்டறியப்படுகிறது. அதைத் தொடர்ந்த பரிசோதனைக்கூட ஆய்வுகளில், அந்தப் பூஞ்சை அதிகமான உஷ்ணத்தில் உற்பத்தியானவை என்றும் அவை நுரையீரல்களைப் பாதிக்கும் என்றும் தெரியவந்தது. இதேபோன்று பல இடங்களிலும் ஆஸ்துமா நோயின் அறிகுறிகள் பரவிவருவதைக் கண்டு மருத்துவர்கள் திகைப்படைந்து வருகின்றனா். இது முன்னெப்போதும் உருவாகாத ஒன்று.
கரப்பான் பூச்சிகள் எவ்வளவு பெரிய தட்பவெப்ப நிலை மாற்றங்கள் நடந்தாலும் மடிந்து போவதில்லை. அதனுடைய உடலமைப்பு கதிர் வீச்சுகளையும் தாங்கி நிற்பவை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனா். இவை புறச்சூழலிலுள்ள அதிக வெப்பம் காரணமாக அதிகமாக இனப்பெருக்கத்தை மேற்கொள்வதாக பூச்சி இயல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனா். புவி திடீரென்று வெப்பம் அடைவதால் பூச்சி இனங்களும் பல்வேறு உயிரினங்களும் தங்களுடைய இனப்பெருக்கக் காலத்தை மாற்றிவருகின்றன. உயரும் வெப்ப அளவுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் புதிய உயிரினங்களும் புதிய பூச்சி இனங்களும் உருவாகிவருகின்றன என அறிவியல் இதழ்கள் கவலை தெரிவித்துவருகின்றன. இதுவும் முன்னெப்போதும் நிகழ்ந்திராவை.
வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததும் அதைத் தொடர்ந்து விவசாயம் கடுமையான நெருக்கடிக்குள்ளானதும் இனி தொடர் நிகழ்வுகளாக இருக்கப்போகின்றன.
ஆடிப்பட்டம் தேடி விதை , பருவத்துக்கேற்ப பயிர் செய் என்ற பருவ மாற்றங்களுக்கேற்ப நடைபெறும் முக்கிய விவசாய உற்பத்திப் பணிகள் இனி நடைபெறாது. குளிர்காலத்தில் வெயில் அடிப்பதும், மழைக் காலத்தில் காற்றடிப்பதும், காற்றடிக்கும் காலத்தில் வெப்பம் புழுங்குவதும் என மாறி மாறி பருவ காலங்களில் நடக்க வேண்டியவற்றுக்கு மாறாக சம்பந்தமில்லாமல் முரணான நிகழ்வுகள் நடக்கும். இதுவரை சென்ற தலைமுறை அனுபவி்த்துவந்த பருவச் சமன் நிலை சீர்குலைந்துவருகிறது.
கால நிலை மாற்றத்தினால் மொத்தச் சூழல் அமைப்பின் நிலையும் பாதிக்கப்பட்டுப் பருவ காலங்களின் சமன் நிலைகளில் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் அதிக மழைப்பொழிவு, பனிப்பாறைகள் உருகுதல், அதனால் கடல் மட்டம் உயர்ந்து வருதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக கடலைவிடத் தாழ்வான நிலப்பகுதிகள், தீவுகள் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. ஐஸ்லேண்டும் நம் நாட்டில் சுந்தர வதனக் காடுகளும் இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.
புதிய புதிய நோய்களின் வரவு என்பது வெப்பம் கூடுவதால் மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படப் போவதற்கான முன்னெச்சரிக்கையாகும். பருவ மழை பொய்ப்பது, கடுமையான வரலாறு காணாத வறட்சி, புதிய பூச்சிகளின் படையெடுப்பு, உயிரினங்களின் இனப்பெருக்கத்தில் நடைபெறும் மாற்றங்கள், பருவ சமன் நிலை பாதிப்பு எனப் பன்முகத்தன்மை வாய்ந்ததும் அழிவுத்தன்மை வாய்ந்ததுமான மாற்றங்கள் ஒருசேர வந்து நம்மைத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், நாம் வாழும் பூமியானது வெப்பமடைந்துவருவதுதான். இதன் விளைவாகவே கால நிலை மாற்றங்கள் வெகுவேகமாக நடந்துவருகின்றன.
காலநிலை மாற்றத்தினால் பன்முகத்தன்மை வாய்ந்த பேரழிவை நோக்கி மனிதகுலம் நடைபோட்டு வருகிறது.
இவையெல்லாம் எங்கோ நிகழ்ந்துகொண்டிருக்கவில்லை. நம் கண்முன்னே நடந்தவை, நடக்கப் போகின்றவை. சில ஆண்டுகளுக்கு முன்னதாக மும்பையில் 100 நாள்கள் பெய்ய வேண்டிய மழை ஒரு வாரத்திலேயே கொட்டித் தீர்த்ததும், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாள்களிலேயே கொட்டியதால் சென்னை வெள்ளத்தில் மிதந்ததும், வர்தா புயலைத் தொடர்ந்து ஓகி புயல் என அனைத்தும் கால நிலை மாற்றத்தின் விளைவுகளே. இவை மனித சக்திக்கு அப்பாற்பட்ட பேரிடர்கள். இத்தகைய பேரிடர்கள் நம்மை எப்படி பாதித்தன என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை.
புவி வெப்பமடைதலைத் தடுத்து நிறுத்த விட்டால் பேரிடர்களின் பல ஆயிரம் மடங்குகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
(தொடரும்…)�,”