tகிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு சீஸ் பால்ஸ்

Published On:

| By Balaji

பச்சைப்பயறு நமது பாரம்பரிய தானியம். இது பாசிப்பயறு, பச்சைப்பருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. சருமத்துக்குப் பொலிவு தரும் ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவாக உள்ளது. இத்தனை அற்புதம் நிறைந்த பச்சைப்பயற்றை குடும்பத்தினருக்குக் கொண்டுசேர்க்கும்விதமாக இல்லத்தரசிகள் இந்த பச்சைப்பயறு சீஸ் பால்ஸ் செய்து அசத்தலாம்.

**என்ன தேவை?**

உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது)

பச்சைப்பயறு – அரை கப்

வெங்காயம் – 2

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கேரட் – கால் கப் (துருவியது)

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – 4 டீஸ்பூன்

சீஸ் – அரை கப்

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – தேவையான அளவு

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு, பிரெட் தூள் – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

உருளைக்கிழங்கு, பச்சைப்பயற்றை தனித்தனியாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். பின்னர் அவற்றுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், துருவிய கேரட், சீஸ், கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கார்ன்ஃப்ளாரில் தண்ணீர்விட்டுக் கரைத்து, அதில் உருண்டைகளை முக்கியெடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும்.

இந்த உருண்டைகளைச் சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து எடுக்கவும். சுவை மிகுந்த பச்சைப்பயறு சீஸ் பால்ஸ் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு தால்](https://minnambalam.com/k/2020/01/29/7)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share