வீட்டில் அடைந்து கிடப்பவர்களுக்கு நாள் முழுக்க எதையாவது தின்று பருமனை அதிகரிக்கும் நாட்களாக இந்த வாரம் கடந்திருக்கும். இப்படிப்பட்ட நாட்களில் காலை உணவுக்குப் பதில் இந்தக் கஞ்சியை எடுத்துக்கொண்டால் பருமன் குறையும். கொள்ளுவில் உடலுக்குத் தேவையான இரும்பு, பொட்டாசியம் ஆகிய தனிமங்கள் நிறைந்திருக்கின்றன. வாரத்தில் ஒருநாள் இந்தக் கஞ்சி வைத்து பருகுவது அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
**என்ன தேவை?**
கொள்ளு – கால் கிலோ
கைக்குத்தல் அரிசி அல்லது சிவப்பரிசி – 100 கிராம்
பார்லி – கால் கிலோ
சுரைக்காய் – 200 கிராம்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
கொள்ளு, பார்லி, அரிசி மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். அத்துடன் சீரகம் சேர்த்து பாட்டிலில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது சுரைக்காயைப் பொடியாக நறுக்கி வேகவைத்து, 3 டீஸ்பூன் அரைத்துவைத்த பொடியைச் சேர்த்து, உப்பு போட்டு கஞ்சி செய்துகொள்ளலாம்.�,