மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், தனது விசாரணையை நீட்டிக்க தமிழக அரசிடம் மேலும் கால அவகாசம் கோரியுள்ளது.
ஏற்கெனவே மூன்று முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முடிவடைய இருந்தது. அப்போலோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆணையம் அளித்த பதில் மனுவில்கூட, விசாரணை முடியும் தருவாயில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 15) மாலை, ஆணையத்திலிருந்து மேலும் நான்கு மாத கால அவகாசம் கேட்டு மாநில அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக நேற்று தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தன. அதாவது தனது விசாரணை அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க ஆறுமுகசாமி ஆணையம் வரும் ஜூன் 24ஆம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆறுமுகசாமி ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தவர்களில் முக்கியமானவரான துணை முதல்வர் பன்னீர்செல்வம்தான் ஜெயலலிதா இறக்கும் நேரத்தில் தமிழக முதல்வராக இருந்தவர். அவர் ஆணையத்தின் விசாரணையில் பங்கேற்க மூன்று முறை அழைக்கப்பட்டும் பங்கேற்கவில்லை. கடைசியாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவர் 19ஆம் தேதி ஆஜரானால்கூட பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் அவரிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
மேலும், “ஓ.பன்னீர்செல்வம் மட்டுமல்ல, இந்த ஆணையத்தை அமைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் பற்றி பல்வேறு தகவல்களைப் பொது மேடைகளில் சொல்லியிருக்கும் அமைச்சர்கள், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரையும் எங்கள் தரப்பு சாட்சிகளாக விசாரிப்போம்” என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆணையத்தின் பதவிக் காலம் நான்காவது முறையாக மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.�,