நடிகை நதியா நடிப்பில் இரு தெலுங்கு திரைப்படங்கள் தயாராகியுள்ளன. தற்போது அவர் முதன்முறையாகக் குறும்படம் ஒன்றில் நடித்துவருகிறார். கொல்கத்தா பிலிம் இன்ஸ்டியூட் மாணவர் இயக்கும் அந்தக் குறும்படத்திற்கான படப்பிடிப்பு கொச்சி கோட்டையில் நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெறும் கலைக் கண்காட்சிக்கு சென்றுள்ளார் நதியா.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்குக் கலை செயல்பாடுகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் எனக்கு மிகவும் விருப்பமானது. ஓவியம் என்பது முடிவில்லாத திரைப்படம். பார்வையாளர்களுக்குள் எதையோ விட்டுச் செல்கிறது” என்று கூறினார். நதியா ஜே.ஜே.கலைப் பள்ளியில் பயன்பாட்டு கலை பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘கொச்சி முஸ்ரிஸ் பினாலே’ என்ற இந்த நிகழ்வு நான்காவது முறையாக நடைபெறுகிறது. சமகாலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு 94 கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
“ஒவ்வொரு முறையும் சமகாலப் பிரச்சினைகளை கருப்பொருளாக்கிப் படைப்புகளை உருவாக்குவது அருமையான விஷயம். இந்த முறை பாலியல் பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல், உளவியல் பிரச்சினைகள், குறிப்பாகக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்” என்று நதியா பகிர்ந்து கொண்டார்.
�,