tஒதுங்கிப் போகும் திமுக: மு.க.அழகிரி ஆதங்கம்!

Published On:

| By Balaji

திமுகவினர் தன்னை பார்க்கக் கூட வருவதில்லை என மு.க.அழகிரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனும், மத்திய அமைச்சராக இருந்தவருமான மு.க.அழகிரிக்கு இன்று 69 ஆவது பிறந்தநாள். திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், சமீப காலமாக அமைதியாகவே இருந்து வருகிறார். திமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில வருடங்கள் அதிரடியாக தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அழகிரி, சமீப வருடங்களாக பெரிய அளவில் கொண்டாட்டங்களையும் விரும்பவில்லை. அதுபோலவே இந்த வருடமும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அழகிரி தவிர்த்துவிட்டார்.

மதுரையில் வழக்கறிஞர் மோகன்குமார் இல்லத் திருமண நிகழ்வு இன்று (ஜனவரி 30) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அழகிரி மணமக்களை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய அழகிரி, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இங்கு அமர்ந்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது வழக்கறிஞர் மோகன் குமார் அவருக்கு பல உதவிகளை செய்தார். அதனை சுப்புலட்சுமி ஜெகதீசன் மறந்திருக்க மாட்டார். இப்போதெல்லாம் மறப்பது என்பது மிக சாதாரண விஷயம். அதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. அதிமுகவினர் கூட என்னை எங்கேயாவது பார்த்தால் நின்று வணக்கம் வைத்து பேசிவிட்டுச் செல்கிறார்கள்.

ஆனால், பழகிய திமுகவினர் என்னைப் பார்க்கக் கூட வருவதில்லை. ஏதாவது நிகழ்வுகளில் நான் வருவேன் என்று தெரிந்தால், நான் வந்துசென்ற பிறகுதான் வருகிறார்கள். இந்த நிலை மாறும் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நான் நினைத்ததை சாதிப்பவன் என்று அனைவருக்கும் தெரியும். ஒருவர் மட்டும் கலைஞருக்கு மகன் அல்ல. நானும் கலைஞருக்கு மகன்தான்” என்று பேசினார்.

இந்த நிலையில் பிறந்தநாளைக் கொண்டாடும் மு.க.அழகிரிக்கு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதுபோலவே நடிகர் பிரபு, கவிஞர் வைரமுத்து, நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் ஆகியோரும் அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share