நேற்றைய (மார்ச் 29) ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது ஆட்டம் நேற்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி துவக்க வீரரான ஜோஸ் பட்லர் ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டாகி வெளியேற, சஞ்சு சாம்சன் கேப்டன் ரஹானேவுடன் களத்தில் இணைந்தார். இருவரும் துவக்கத்தில் நிதானமாக ஆடி தங்களது விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் அதிரடிக்கு மாறி இருவரும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினர்.
16ஆவது ஓவர் வரை களத்தில் நின்ற ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் கடைசி ஓவரில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சதம் இதுவாகும். கடைசி ஓவர்களில் பென் ஸ்டோக்ஸும் தன் பங்குக்கு 9 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 198 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி தரப்பில் ரஷித் கான் மற்றும் சபாஸ் நதீம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிக மோசமாகப் பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 55 ரன்களை வாரி வழங்கினார்.
கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் வழக்கம்போல அதிரடி காட்டினார். அவருக்கு ஜானி பெய்ர்ஸ்டோவ் நல்ல ஒத்துழைப்பு வழங்கவே இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஆட்டத்தின் பத்தாவது ஒவரில் 37 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரிலேயே 45 ரன்களில் பெய்ர்ஸ்டோவும் வெளியேற இக்கட்டான சூழலில் ஹைதராபாத் அணி இருந்தது. அப்போது களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் மூன்று சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. இறுதியில் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
துல்லியமாகப் பந்துவீசி முக்கியமான ஜோஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதோடு, பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றிபெறச் செய்த ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.�,”