மத்திய அரசு, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும் என நேற்று (மார்ச் 13) டெல்லியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேற்று டெல்லியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையிலான குழு சந்தித்தனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர், அவரிடம் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற ‘காசநோயை ஒழிப்போம்’ என்ற மாநாட்டில் மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.
“அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் பயன்படுத்துவது குறித்து ஓரிரு வாரங்களில் அரசாணை அறிவிக்கப்படும். மேலும் காசநோயை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின்படி, 2025 ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதில் தமிழகம் தீவிரம் காட்டி வருவதாகவும்” அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, மத்திய அரசு சார்பில் கோரப்பட்டிருந்த அனைத்துத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாநில அரசால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் தாமதமாகவில்லை என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், இதற்காகத் தமிழக அரசு பரிந்துரைத்த இடங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
�,